கோலாலம்பூர், பிப் 27: சமீப காலமாக 16 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரிடையே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (ஜேஎஸ்ஜே) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்தார்.
"ராயல் மலேசியன் காவல்துறை பதிவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 11.8 சதவிகிதம் அதாவது 202 வழக்குகள் அதிகரித்துள்ளன" என்று அவர் கூறினார்.
அதில் பெரும்பாலான வழக்குகள் B40 குழுவை உள்ளடக்கியது. இந்த குற்றத்திற்கான காரணிகளில் ஒன்று பெற்றோரின் மேற்பார்வையின்மை மற்றும் இணையத்தில் தவறான பதிவுகளை எளிதாக அணுகுவது ஆகும் என்றார்.
குழந்தைகள் தகாத இணையதளப் பக்கங்களில் உலாவுவதை தவிர்க்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவும், தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவும் இருக்க வேண்டும்.
எல்லையற்ற தகவல்தொடர்பு மற்றும் எளிதான அணுகல் ஆகியவை குழந்தைகளின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் தடைசெய்யப்பட்ட விஷயங்களை அணுகலாம் மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுப்படலாம்.
இந்தப் பிரச்சனை சமூகத்தில் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் காவல்துறை தனியாக ஈடுப்பட முடியாது, அதற்குப் பதிலாக குடும்பம், கல்வி நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்றார்.
"ஒரு நல்ல கொள்கை ஒரு நல்ல சமூதாயத்தை உருவாகும்," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா




