ஷா ஆலம், பிப் 27- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணியிலும் பொறுப்புகளிலும் பிரதிரூப மாற்றத்தை ஏற்படுத்துமாறு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களுக்கான சேவைகளை விரைவு படுத்துவதற்கு ஏதுவாக சிவப்பு நாடா எனப்படும் நிர்வாக நடைமுறைகள் மற்றும் சிக்கலான விதிகள் குறைக்கப்பட வேண்டும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.
பல மேம்பாட்டுத் திட்டங்கள் தாமதமாவதற்கு அல்லது பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு காரணமாக இருக்கும் அலட்சியம் மற்றும் சோம்பேறித்தனமான மனப்பான்மையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டாம் என்றும் அரசு ஊழியர்களுக்கு அவர் நினைவூட்டினார்.
உதாரணமாக, வெள்ளத் தணிப்பு மற்றும் மக்களுக்கான அடிப்படை வசதி மேம்படுத்தும் திட்டங்கள் இன்னும் விரைந்து செயல்படுத்தப்படாமல் உள்ளன என்றார் அவர்.
அரசு ஊழியர்கள் மத்தியில் இதுபோன்ற அணுகுமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் இன்னும் இருந்தால் அதன் விளைவுகளை எனது மாநில மக்கள் தொடர்ந்து அனுபவிக்க நேரிடும் என்று நான் மிகவும் கவலைப் படுகிறேன் என்று அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற 15 வது மாநில சட்டமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊராட்சி மன்றங்கள் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் அல்லாமல் குறைந்தபட்சம் 50 விழுக்காடு உறுப்பினர்கள் தொழில் வல்லுநர்களாக இருக்க வேண்டும் என்ற தமது பரிந்துரை அமல்படுத்த வேண்டும் என்பதையும் சுல்தான் நினைவூட்டினார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை களத்தில் இறங்கி நேரில் கண்டறிவதன் மூலமாகவே மக்களின் பிரச்சினைகள் மற்றும் புகார்களை சிறப்பான முறையில் கையாள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்கும் ஊராட்சி மன்றங்கள் மற்றும் பொதுப்பணி இலாகா, வடிகால், நீர் பாசனத்துறை போன்றவை பொதுச் சொத்துக்கள் நன்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நான் விரும்புகிறேன் என்றார் அவர்.




