கோல சிலாங்கூர், பிப் 27- வறட்சி நிலை அடுத்தாண்டில் மேலும்
மோசமான கட்டத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படும் எல் நினோ
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின்
(லுவாஸ்) தலைமையில் சிறப்புச் செயல்குழுவை மாநில அரசு
அமைத்துள்ளது.
மலேசிய தேசிய நீர் ஆய்வுக்கழகத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை
நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னர் இந்த செயல்குழு அமைக்கப்பட்டதாக
அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம்
கூறினார்.
எதிர்வரும் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நாடு மிகவும் கடுமையான
வறட்சியை எதிர்கொள்ளும் என்று அந்த ஆய்வுக் கழகம்
தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மக்களின் அடிப்படைத் தேவைக்கு மட்டுமின்றி விவசாயத்திற்குப்
போதுமான நீர் கிடைப்பதற்கும் நீர் பங்கீட்டை தவிர்ப்பதற்கும் ஏதுவாக
மாநிலத்தில் நீர் வளம் முறையாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்யும்
நோக்கில் லுவாஸ் தலைமையில் பணிக்குழு ஒன்றை நாங்கள்
அமைத்துள்ளோம் என்று அவர் சொன்னார்.
தற்போது மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் கையிருப்பு 85
விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளதால் இவ்வாண்டு வறட்சி காலத்தில்
ஒன்பது மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் ஆற்றலை அவை கொண்டுள்ளன
என்று அவர் தெரிவித்தார்.
கோல சிலாங்கூர், ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையப் பகுதியில்
கச்சா நீர் ஆதாரத் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இந்த செயல்குழுவில் வடிகால் மற்றும் நீர்பானத்துறை (ஜே.பி.எஸ்),
பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் (ஆயர் சிலாங்கூர்)
மற்றும் யுபென் எனப்படும் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு
ஆகியவை இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.
தற்போது உலகை கடுமையாகத் தாக்கி வரும் எல் நினோ பருவநிலை
மாற்றம் அடுத்தாண்டு மத்திய பகுதி வரை நீடிக்கும் என்று வானிலை
ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹெல்மி அப்துல்லா
முன்னதாக கூறியிருந்தார்.




