புத்ராஜெயா, பிப் 27- கடந்தாண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 93 வங்காளதேச தொழிலாளர்களைக் கைவிட்டதற்காக பெம்பினஹான் ரிக்கோலர் சென். பெர்ஹாட் என்ற நிறுவனத்திற்கு எதிராக உள்துறை அமைச்சும் மனித வள அமைச்சும் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கின்றன.
இம்மாதம் பிப்ரவரி 22ஆம் தேதியன்று இணைய ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து இரு அமைச்சுகளும் நடத்திய விசாரணையில் அத்தொழிலாளர்கள் வேலை அல்லது தங்குமிடமின்றி அவர்களது முதலாளியால் கைவிடப்பட்டதைக் கண்டறிந்தனர்.
அத்தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சம்பந்தப்பட்ட முதலாளி தவறிவிட்டார் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோர் நேற்று வெளியிட்டக் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் புத்ராஜெயா குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு ஆவணப் பதிவு நடவடிக்கைக்காக கொண்டுச் செல்லப்பட்டப் பின்னர் இடைக்காலப் பாதுகாப்பு ஆணையைப் பெறுவதற்கு மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் செல்லப்பட்டனர் என அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் அந்த முதலாளி, 1990ஆம் ஆண்டு பணியாளர்கள் குறைந்தபட்ச வீட்டு வசதி மற்றும் தங்குமிடச் சட்டம், 1995 ஆம் ஆண்டு வேலை வாய்ப்புச் சட்டம், 2007ஆம் ஆண்டு மனிதக் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் 1966ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 12வது பிரிவு உள்பட ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
தொழிலாளர்களின் நலனை எப்போதும் பாதுகாக்கவும் நாட்டின் சட்டங்களுக்கு ஏற்பவும் நடக்க வேண்டும் என்ற கடுமையான எச்சரிக்கையை எங்கள் அமைச்சுகள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் அனைத்து முதலாளிகளுக்கும் விடுக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




