ஷா ஆலம், பிப் 26 - செலவினங்களைக் கட்டுப்படுத்தும் மற்றும்
இலக்கிடப்பட்டத் தரப்பினருக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கும்
திட்டங்களை விரைந்து அமல்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும்
முயற்சிகளுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடு பெரும் கடனைச் சுமப்பதோடு கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நிதிப்
பற்றாக்குறையை எதிர் நோக்கி வருவதை அறிந்து தாம் பெரும்
அதிர்ச்சிக்குள்ளானதாகச் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்தக் கடன் சுமையை நாம் நமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள்
சுமக்க அனுமதிக்கப் போகிறோமா? இந்த கேள்விக்கான பதில் இந்த
அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் உள்ளது என அவர்
சொன்னார்.
இந்த நிதி நிலைமை நீண்ட காலமாகப் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளதோடு
புதிய மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்தும் மற்றும்
பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதற்கு நிதியளிக்கும் அரசாங்கத்தின்
முயற்சிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, இலக்கிடப்பட்டத் தரப்பினருக்கு மானிய உதவிகளை
சென்றடைவதை உறுதி செய்வது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை
எடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நான் ஆதரவளிக்கிறேன் என்று
அவர் தெரிவித்தார்.
இன்று இங்கு பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் மூன்றாம்
தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து
உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
அரசாங்கத்தின் செலவினங்களை இனி தாமே முன்னின்று கண்காணிக்கப்
போவதாக கூறிய சுல்தான் இப்ராஹிம், செலவினம் தொடர்பான
ஒவ்வொரு பரிந்துரையும் அவசியமானதா என்பதை உறுதி
செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாட்டின் போட்டியிடும் தன்மையை வலுப்பெறச் செய்வதற்கு ஏதுவாக
பணி இலக்குகளில் புதுமையைப் புகுத்துவதில் அரசாங்கம் ஆக்ககரமான
அணுகுமுறையைக் கையாளும் எனத் தாம் நம்புவதாகவும் அவர்
கூறினார்.
உயர்மதிப்பு கொண்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அரசாங்கம் முயற்சிகளை
மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், இத்தகைய
முதலீடுகள் மூலம் ஏற்படுத்தப்படும் வேலை வாய்ப்புகள்
தொழிலாளர்களுக்கு நிறைவான சம்பளத்தை தரும் வகையில் அமைய
வேண்டும் என்றார் அவர்.




