அலோர் ஸ்டார், பிப். 26: நேற்று தாமான் டாமாய், பாடாங் செராய், கூலிமில் உள்ள ஒரு காபி கடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்ததாக நம்பப் படுகிறது.
மதியம் 1.20 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், 27 வயது மதிக்கத்தக்க இளைஞன், கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதம் ஏந்திய இருவரால் தாக்கப்பட்டதாகக் கூலிம் மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர் டிஎஸ்பி சஃபுவான் எம்.டி நூர் தெரிவித்தார்.
"டிரக் ஓட்டுநராக பணிபுரியும் பாதிக்கப்பட்டவரை, கடைக்கு வெளியில் இருந்த சந்தேகத்திற்கு இடமான இருவர் துரத்திச் சென்றனர். காபி கடைக்குள் நுழைந்து தன்னைக் காப்பாற்ற முயன்ற பாதிக்கப்பட்டவர் அங்கே இறக்கும் வரை வெட்டப்பட்டார்.
"கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி தாக்கியதில் பாதிக்கப்பட்டவரின் கைகள், மார்பு, முதுகு மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பலியானவரின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது," என்று அவர் கூறினார்.
சம்பவத்தின் நோக்கம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், அந்த இரண்டு சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன என அவர் கூறினார்.
"இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தால், ஏஎஸ்பி அஸ்மிருல் அப்துட் அஜீஸை 019-4446 521 அல்லது கூலிம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 04-4906 222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா




