சுங்கை பட்டாணி, பிப் 26 - இங்குள்ள தாமான் கெலாடியில் இன்று
அதிகாலை இரு வாகனப் பழுதுபார்ப்பு பட்டறைகளில் ஏற்பட்ட தீவிபத்தில்
ஐந்து கார்கள் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன.
இந்த தீவிபத்து தொடர்பில் தீயணைப்பு நடவடிக்கை செயலாக்க
மையத்திற்கு இன்று அதிகாலை 5.23 மணியளவில் புகார் கிடைத்ததைத்
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு ஒன்று சம்பவ இடத்திற்கு
விரைந்ததாக சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின்
தலைவர் தீயணைப்பு துணை ஆணையர் 1, இஸ்மாயில் முகமது ஜைன்
கூறினார்.
சுங்கை பட்டாணி தீயணைப்பு நிலையம் மற்றும் அமான் ஜெயா
தீயணைப்பு நிலையத்திலிருந்து 17 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு
வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும்
முயற்சியில் ஈடுபட்டனர். பாக்கார் ஆராங் தன்னார்வலர் தீயணைப்புக்
குழுவினரும் தீயை அணைக்கும் பணியில் உதவினர் என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அதிகாலை 5.45 மணியவில் தீ கட்டுப்பட்டிற்குள் கொண்டு வரப்பட்ட
வேளையில் அதிகாலை 6.36 மணியளவில் தீ முழுமையாக
அணைக்கப்பட்டது. தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு
வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.




