கோலாலம்பூர், நவ 26 - நாட்டின் நிலைத்தன்மைக்கு மிரட்டலை ஏற்படுத்த முயலும் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கைக்கும் தாம் செவிசாய்க்கப் போவதில்லை என்று மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறினார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முதன் முறையாகத் தொடக்கி வைத்து
உரையாற்றிய அவர், நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளில்
கவனம் செலுத்துவதைத் தவிர்த்து நாட்டிலுள்ள 3 கோடியே 30 லட்சம்
மலேசியர்களின் நலனைப் பாதுகாப்பதில் அனைத்து நாடாளுமன்ற
உறுப்பினர்களும் அக்கறை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மக்கள் நலன் காக்கும் பொறுப்பு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல. மாறாக, அனைத்து 222 நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது என்று அவர் சொன்னார்.
ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என 15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தை இன்று தொடக்கிவைத்து உரையாற்றியபோது சுல்தான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
நாட்டை மேம்படுத்துவதில் அரசாங்க தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பதோடு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கூறிய அவர், மக்களுக்கான சுபிட்சம், நாட்டின் வளம் மற்றும் இறையாண்மையை தாம் எப்போதும் உறுதி செய்யவுள்ளதாகச் சொன்னார்.
மாண்புமி நிறைந்த அவையில் நிறைவேற்றிய சட்டங்களையே அந்த அவையின்
உறுப்பினர்கள் மதித்து நடக்கத் தவறினால் அவர்கள் அப்பொறுப்பினை வகிப்பதில்
பொருளில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தம்மைப் பொறுத்தவரை நாட்டின் வெற்றியும் தோல்வியும் பிரதமரிடம் மட்டும் இல்லை.
அரசாங்கத்தில் தங்களின் பிரதிநிதியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ள 222 நாடாளுமன்ற
உறுப்பினர்களிடம் இருக்கிறது. நாட்டிலுள்ள 33 மில்லியன் மக்களின் வாழ்க்கைக்கு நான் முன்னுரிமை வழங்குவேன் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எனவே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர சொந்த அரசியல் நலன் அல்லது சுயநலத்திற்கு அல்ல என் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.




