புத்ராஜெயா, பிப் 22- கடந்த 2022ஆம் ஆண்டு வரை சமூக நலத்துறையில்
பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 674,548 பேராகும்.
இந்த எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் இரண்டு விழுக்காட்டைப்
பிரதிபலிக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள மதிப்பீட்டு அளவை விட இது
குறைவானதாகும் என்று மலேசியா புள்ளிவிபரத் துறையின் தலைவர்
டத்தோஸ்ரீ முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் வரை உலகம் முழுவதும் 130 கோடி பேர்
குறிப்பிடத்தக்க உடல் குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக உலக சுகாதார
நிறுவனம் கூறுகிறது. இது உலக மக்கள் தொகையில் 16 விழுக்காடாகும்
என்று அவர் தெரிவித்தார்.
மொத்த மாற்றுத் திறனாளிகளில் 36.3 விழுக்காட்டினர் அல்லது 245,015
பேர் உடல் ரீதியான குறைபாடுகளைக் கொண்டுள்ள வேளையில் 35.1
விழுக்காட்டினர் கற்றல் குறைபாடுகளையும் 8.8 விழுக்காட்டினர் பார்வை
குறைபாட்டினையும் 0.5 விழுக்காட்டினர் பேச்சுத் திறன் குறைபாட்டையும்
கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் 2,580 பேராக இருந்த சிகிச்சைப் பெறும் மாற்றுத்
திறனாளிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 3,940 பேராக
உயர்ந்துள்ளதோடு இவர்களில் கற்றல் குறைபாடு கொண்டவர்கள்
எண்ணிக்கை 81.3 விழுக்காடு உள்ளதை மருத்துவ ஆய்வுகள்
காட்டுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கல்வியைப் பொறுத்த வரை கடந்த 2021ஆம் ஆண்டில் 1,461 பேராக
இருந்த சிறப்புப் பள்ளிகளில் சேரும் மாற்றுத் திறனாளி மாணவர்களின்
எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 1,477 பேராக உயர்வு கண்டுள்ளது.
இடைநிலைப்ப பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அக்காலக் கட்டத்தில் 1,046லிருந்து 1,067 பேராக உயர்வு கண்டது என்றார் அவர்.
அரசு துறைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை
கடந்த 2022ஆம் ஆண்டில் 3,724 பேராக உயர்வு கண்ட வேளையில்
அவர்களில் உடல் ரீதியாக குறைபாடுகள் கொண்டவர்கள் எண்ணிக்கை
2,551ஆக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.




