ஈப்போ, பிப் 21: நேற்று இரவு சிலிம் ரிவர் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை கிலோமீட்டர் 379 இல் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் 100 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட இராணுவ வீரர் உயிரிழந்தார்.
நேற்று இரவு சுமார் 11.14 மணியளவில் அரச மலேசியன் காவல்துறைக்குச் சொந்தமான இசுஸு லாரி, யமஹா 125ZR மோட்டார் சைக்கிள் மற்றும் நிசான் அல்மேரா கார் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தனது தரப்புக்குக் தகவல் கிடைத்தது என முஹல்லிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 28 வயதுடைய முகமட் ஹபீஸ் யூஸூப் என்பவர் பலத்த காயங்களால் உயிரிழந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், லான்ஸ் கார்போரல் அந்தஸ்தில் உள்ள 39 வயதுடைய காவல்துறை அதிகாரி, பினாங்கில் உள்ள பத்து உபான் மண்டலம் 1 மரின் காவல்துறை படையிலிருந்து ஷா ஆலமை நோக்கி லாரி ஓட்டிச் சென்றது கண்டறியப்பட்டது.
"சிலிம் ரிவர் அருகே தெற்கு நோக்கி செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் KM 379இல் லாரி சேதமடைந்ததால் ஒட்டுநர் அவசரப் பாதையில் நிறுத்தினார்.
சிறிது நேரம் கழித்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு வலது பின்புற திசையிலிருந்து இடி சத்தம் கேட்டது, காரணம் முகமட் ஹபீஸ் யூஸூப் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் லாரியை மோதியது," என்று அவர் கூறினார்.
அச்சமயம் வலது பாதையில் வந்த கார் முகமட் ஹபீஸைத் தவிர்க்க முடியாமல், அவர் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார். .
"இந்த விபத்தின் விளைவாக, முகமது ஹபீஸ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சிலிம் ரிவர் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டது," என்று முகமட் ஹஸ்னி கூறினார்.
பிற இரு ஓட்டுநர்களுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கபடுவதாகவும் முகமட் ஹஸ்னி கூறினார்.
- பெர்னாமா




