ஈப்போ, பிப் 21- இங்குள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின்
நிபுணத்துவ கிளினிக் எதிரே உள்ள கார் நிறுத்துமிடத்தில் பூட்டப்பட்ட
காரில் பெண் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 6.07 மணியளவில் தகவல்
கிடைத்தைத் தொடர்ந்து மாலை 6.24 மணியளவில் தீயணைப்பு குழுவினர்
சம்பவ இடத்தை அடைந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபோராட்ஸி நோர்
அகமது கூறினார்.
அங்கு பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட டோயோட்டா கேம்ப்ரி ரக
காரில் பெண் ஒருவர் இறந்த நிலையில் காணபட்டதைத் தொடர்ந்து
தீயணைப்பு வீரர்கள் சிறப்பு சாதனங்களைக் கொண்டு காரின் கதவைத்
திறந்ததாக அவர் தெரிவித்தார்.
இருபது வயது மதிக்கத்தக்க அப்பெண்ணுக்கு மருத்துவ அதிகாரிகள்
முதலுதவி அளித்ததாகவும் எனினும் அவர் உயிரிழந்து விட்டது உறுதி
செய்யப்பட்டதாகவும் சபோராட்ஸி அறிக்கை ஒன்றில் சொன்னார்.
மேல் நடவடிக்கைக்காக அப்பெண்ணின் சடலம் போலீசாரிடம்
ஒப்படைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.




