ஜெம்போல், பிப் 21- பொழுதுபோக்கு பூங்காவிற்கு குடும்பத்தினர்
மேற்கொண்ட மகிழ்ச்சிகரமான பயணம் பெரும் துயரில் முடிந்தது. அந்த
பூங்காவிலிருந்த மரம் திடீரென விழுந்ததில் நான்கு வயது ஆண் குழந்தை
உயிரிழந்ததோடு ஒன்பது வயதுச் சிறுமி காயங்களுக்குள்ளானார்.
இத்துயரச் சம்பவம் இங்குள்ள பத்து கிக்கிர் பொழுதுபோக்கு பூங்காவில்
நேற்று பிற்பகல் 1.17 மணியளவில் நிகழ்ந்தது. தலை மற்றும் நெஞ்சில்
ஏற்பட்ட பலத்தக் காயங்கள் காரணமாக அக்குழந்தை சம்பவ
இடத்திலேயே உயிரிழந்த வேளையில் காயங்களுக்குள்ளான சிறுமி கோல
பிலா துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் அக்குழந்தைகளை அவர்களின் தந்தை
நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹூ சாங் ஹோக் கூறினார்.
நீச்சல் குளத்திலிருந்த அவ்விரு உடன்பிறப்புகளும் சற்று தொலைவில்
இருந்த தங்கள் தந்தையிடம் செல்லும் நோக்கில் ஓடி வந்த போது மரம்
ஒன்று திடீரென அவர்கள் மீது விழுந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.




