கூச்சிங், பிப் 21- சரவா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் முன்னாள்
முதலமைச்சருமான துன் அப்துல் தாயிப் மாமுட் (வயது 87) இன்று
அதிகாலை கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
சரவா மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர்
மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா
இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
அப்துல் தாயிப் மறைவு தொடர்பான தகவலை பொருளாதாரத் துறை
துணையமைச்சர் டத்தோ ஹனிபா ஹாஜார் தாய்ப்பின் தனிச் செயலாளர்
நுர் ஷாபிக் அப்துல் கரீமும் உறுதி செய்தார்.
ஹனிபா ஹாஜாரின் நேசத்திற்குரிய தந்தை இன்று அதிகாலை 4.40
மணியளவில் மறைந்தார் என துணையமைச்சரின் சமூக ஊடகம்
வாயிலாக வெளியிட்ட செய்தியில் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1936ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி பிறந்த அப்துல் தாயிப்
மாமுட், சரவா மாநில முதலமைச்சராக 33 ஆண்டுகள் பதவி வகித்ததோடு
அம்மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை வடிமைத்த முன்னோடியாகவும்
விளங்கினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மே முதல் தேதி சரவா மாநில ஆளுநராக துன்
தாயிப் மாமுட் நியமிக்கப்பட்டார்.
பத்தாண்டுகள் அப்பதவியை வகித்தப் பின்னர் துன் டாக்டர் வான்
ஜூனைடி துவாங்கு ஜாபருக்கு வழி விட்டு அப்பதவியைக் கடந்த ஜனவரி
29ஆம் தேதி அவர் துறந்தார்.




