கோத்தா பாரு, பிப். 20 - லாமான் வனிதா (லாவா) வாயிலாக வழங்கப்படும் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் அதிகமான பெண்களை பங்கேற்க மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு ஊக்குவிக்கிறது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.
இதன் மூலம் பெண்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தேவையான வருமானத்தை சுயமாக ஈட்டும் அதேவேளையில் இயல்பாகவே வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்று அவர் சொன்னார்.
நாட்டில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பை 60 சதவீதமாக உயர்த்துவதற்கான மடாணி அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்திற்கேற்ப இது அமைந்துள்ளது.
லாவா தற்போது சமூகத்திற்கிடையே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கான ஓரிட மையமாக உள்ளது. இது பெண்கள் திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்களையும் அமல்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பெண்கள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கிய ஒரு சமூக ஒருங்கமைப்பு மற்றும் தகவல் மையத்தைத் தொடங்குவதற்கான ஒரு தளமாகவும் இது உள்ளது என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, அவர் 2024 அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 'லாவா நெகிரி சிக் சிட்டி வான் கெம்பாங்' ஐ நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது, பாலின சமத்துவத்தை வலுப்படுத்துவது, பொருளாதார மேம்பாட்டை அதிகரிப்பது ஆகியவற்றை பொது மற்றும் தனியார் துறைகளில் பெண்களின் பங்கேற்பை உள்ளடக்கிய கலந்துரையாடல் நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.




