ஷா ஆலம், பிப் 20 - கிள்ளான் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில்
அங் பாவ் வசூல் வேட்டையில் ஈடுபட்ட துப்புரவு பணியாளரின் சீருடை
அணிந்த வெளிநாட்டுப் பிரஜைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை என்று கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் சென். பெர்ஹாட்
நிறுவனம் தெளிவுபடுத்தியது.
அந்த வெளிநாட்டு ஆடவரை தங்கள் நிறுவனமோ அல்லது துணைக்
குத்தகையாளர்களோ வேலைக்கமர்த்தவில்லை என்பது தாங்கள்
மேற்கொண்ட உள்விசாரணையில் தெரியவந்ததாக மாநில அரசின் அந்த
திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் கூறியது.
கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம்
மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்வில் அங் பாவ் வசூலில் ஈடுபட்ட
அந்நபர் கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் அல்லது அதன் துணைக்
குத்தகையாளர்களுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிராதவர் என்பது
தெரிவந்துள்ளது என்று அது நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
குறிப்பிட்டது.
கிள்ளான் பண்டார் புக்கிட் திங்கி 2, ஜாலான் பத்து நீலாம் சாலையில்
உள்ள குடியிருப்புகளில் அந்த கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட்
மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் டி சட்டை அணிந்த நபர் அங் பாவ்
கோருவதை சித்திரிக்கும் காணொளி சமூக ஊடங்களில் பரவலாகப்
பகிரப்பட்டு வருவது தொடர்பில் அந்நிறுவனம் இந்த விளக்கத்தை
அளித்தது.
இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதால் இதன் தொடர்பில்
மேலும் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க அந்த காணொளியைச் சமூக
ஊடகங்களிலிருந்து அகற்றி விடும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரை
அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.
பொது மக்கள் மத்தியில் குழப்பமும் தவறான புரிதலும் ஏற்படுவதைத்
தவிர்க்க உறுதிப்படுத்தப்படாத இத்தகைய காணொளிகளைப் பகிர்வதை
பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.




