கோலாலம்பூர், பிப் 20 - பதிப்புரிமைப் பெற்ற படைப்புகளை வெளியிடும்
அல்லது திரையிடும் நபர்களுக்கு எதிராக ஆஸ்ட்ரோ கடும் நடவடிக்கை
எடுக்கும் என்று அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு
தலைமை அதிகாரி தாய் காம் லியோங் எச்சரித்துள்ளார்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக
ஸ்தாபனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட
மற்றும் அமலாக்க நடவடிக்கைகளுக்குச் சாதமான பலன்கள்
கிடைத்துள்ளதை ஆஸ்ட்ரோ வரவேற்பதாக அவர் சொன்னார்.
எங்கள் ரசிகர்களுக்கு உள்ளடக்கங்களை வழங்கும் எங்களின் ஆற்றலை
கள்ளப்பதிப்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்பதோடு மலேசியர்களுக்காகச்
சிறப்பான உள்ளடக்கங்களை வழங்குவதற்கு மேலும் முதலீடுகளைச்
செய்யும் எங்களின் ஆற்றலையும் சிதைக்கிறது என்று அவர் அறிக்கை
ஒன்றில் கூறினார்.
இங்குள்ள உணவு மற்றும் பான விற்பனை மையம் மற்றும் கேமரன்
மலையிலுள்ள ஆடை ஆபரண ஹோட்டல் ஆகியவற்றுக்கு எதிராக
ஆஸ்ட்ரோ தொடுத்த சிவில் வழக்கில் இழப்பீடாக 55,000 வெள்ளியை
வழங்க இரு நிறுவனங்களும் இணங்கியதோடு ஊடகங்கள் வாயிலாக
மன்னிப்பு கோருவதோடு ஆஸ்ட்ரோவின் பதிப்புரிமையை மீறுவதையும்
நிறுத்திக் கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இது தவிர அவ்விரு நிறுவனங்களும் 53,000 வெள்ளி மதிப்புள்ள ஆஸ்ட்ரோ
வர்த்தக வாடிக்கையாளராக ஆகவும் இணக்கம் தெரிவித்துள்ளன என்று
அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பிரீமியர் லீக்
போட்டியின் போது உயர் நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்ட வரலாற்றுப் பூர்வ தீர்ப்பை முன்மாதிரியாக க் கொண்டு இந்த நிறுவனங்களுக்கு எதிராக ஆஸ்ட்ரே சிவில் வழக்கை தொடுத்தது.
முறையான வர்த்தக லைசென்ஸ் இன்றி ஆஸ்ட்ரோ ஒளிபரப்பு உள்பட
அங்கீகரிக்கப்படாத வழிகளில் வர்த்தக ஸ்தபானங்கள் நிகழ்ச்சிகளை
ஒளிபரப்புவது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில்
கூறியிருந்தது.




