ECONOMY

திவேட் திட்டங்களுக்காக அதிகமான மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசு திட்டம்

19 பிப்ரவரி 2024, 12:17 PM
திவேட் திட்டங்களுக்காக அதிகமான மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசு திட்டம்

தோக்கியோ, பிப் 19- உள்நாட்டில் தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்வித் திட்டங்களை (திவேட்) வலுப்படுத்துவதற்கு ஏதுவாக அதிகமான திவேட் பயிற்சித் திட்ட மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

திவேட் திட்டங்களில் உருவமாற்றத்தைக் கொண்டு வரும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இந்த திட்டம் கல்வியில் பின்தங்கியவர்களுக்கானது என்ற தவறான கண்ணோட்டத்தை முறியடிப்பதை இந்த திட்டம் நோக்கமாக உள்ளது. இந்த திவேட் திட்டம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அமலில் இருந்த போதிலும் முந்தைய அரசாங்கத்தின் நோக்கம் இலக்கை நோக்கியதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.

பெற்றோர்களின் சிந்தனைப் போக்கை மாற்றவும் இந்த துறை சிறப்பான எதிர்காலத்தையும் நல்ல வருமானத்தையும் தரும் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும் நாங்கள் முயன்று வருகிறோம் என அவர் சொன்னார்.

நேற்று இங்கு ஜப்பானில் கல்வி பயின்று வரும் 70 மலேசிய மாணவர்களுடன் சந்திப்பு நடத்திய போது தேசிய திவேட் மன்றத்தின் தலைவருமான அவர் இதனைக் குறிப்பிட்டார். திவேட் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானுக்கு நேற்று தொடங்கி ஏழு நாள் பயணத்தை துணைப் பிரதமர் மேற்கொண்டுள்ளார்.

ஜப்பான் உள்பட வெளிநாடுகளில் பயிலும் திவேட் மாணவர்களின் வாழ்க்கைச் செலவின படியை அதிகரிப்பது  குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று அவர்  குறிப்பிட்டார்.

மலேசியாவின் பிரதான திவேட் பல்கலைக்கழகமாக கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தை (யுனிகேஎல்) மாற்றுவதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகவும் அவர் சொன்னார்.

இவ்வாண்டு ஜூன் மாதம் 2ஆம்  தேதி அனுசரிக்கப்படவுள்ள தேசிய திவேட் தினத்தில் நாட்டின் புதிய திவேட் இலக்கு குறித்த  அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.