கோலாலம்பூர், பிப் 19 - புகைப்பிடிக்கும் இடங்களைக் குறிப்பாகக் குறுக்கலான உணவகங்களில் ஏற்பாடு செய்யும் பரிந்துரை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சர்  டத்தோ ஶ்ரீ டாக்டர்  ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார்.

வளாகத்தின் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடனான சமீபத்திய கலந்துரையாடல் அமர்வின் மூலம் சேகரிக்கப்பட்ட உள்ளீடுகள் உட்பட பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்குகச் சுகாதார அமைச்சகம் இன்னும் காத்திருக்கிறது.

“30க்கும் மேற்பட்ட வளாக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் அமர்வைத் தொடர்ந்து இது எங்கள் பார்வையாக இருந்தது. கோரிக்கை இருந்தால் (புகைபிடிக்கும் பகுதிகளுக்கு), அதன் நடைமுறை மற்றும் சாத்தியக்கூறுகளை நாங்கள் பரிசீலித்து மதிப்பிடுவோம்.

சிறிய மற்றும் திறந்த உணவு வளாகங்களுக்குச் சென்றபோது தனது சொந்த கண்காணிப்பின் அடிப்படையில், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட புகைபிடிக்காதவர்கள், அருகில் புகைப்பிடிப்பவர்கள் சிகரெட் புகையை வெளியிடும்போது அசௌகரியமாக உணர்கிறார்கள் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர்  ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

"இருப்பினும், நாங்கள் மூன்று மீட்டர் தூர விதியை அமல்படுத்த விரும்பினால், போதுமான இடத்தை வழங்க வேண்டும். உதாரணமாக, ஜாலான் அலோர், புக்கிட் பிந்தாங்கில் இந்த விதியைச் செயல்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதைக் கண்டேன்.

சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஹாங்காங் போன்ற வளர்ந்த நாடுகளில் செய்வது போல், குறுக்கலான இடங்களில் அமைந்திருக்கும் வளாகங்களுக்கு நியமிக்கப்பட்ட புகைபிடிக்கும் பகுதிகளை வழங்குவதை அமைச்சு பரிசீலிக்கும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

ஏனென்றால், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று மீட்டர் தூர விதியை கடைப்பிடிப்பது இந்த வகை உணவகங்களுக்குக் கடினமாக உள்ளது.

- பெர்னாமா