குவாந்தான், பிப் 19: நேற்று கம்போங் பாரு கெபெங் கடற்கரையில் குளித்துகொண்டிருந்த போது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் பங்களாதேச தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட முகமட் ரஷிடுலை (30), கடைசியாகப் பார்த்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மாலை 4.51 மணியளவில் கண்டுபிடிததாகக் குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு கூறினார்.

"பாதிக்கப்பட்டவர் தனது இரண்டு நண்பர்களுடன் மதியம் 12 மணியளவில் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் தங்களைக் காப்பாற்றி கொண்ட நிலையில் முகமட் ரஷிடுல் நீரில் மூழ்கி காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தெங்கு அம்புவான் அவ்சான் மருத்துவமனைக்குக் (HTAA) கொண்டு செல்லப்பட்டது.

மற்றொரு வழக்கில், இங்கு அருகில் உள்ள சுங்கை குவாலா சாட், ஜெரான்டூட்டில் காணாமல் போனதாகக் கூறப்படும் சிறுவன் நீரில் மூழ்கி இறந்திருக்ககூடும் என அஞ்சப்படுவதாகப் பகாங் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) மக்கள் தொடர்பு அதிகாரி சுல்ஃபாட்லி ஜகாரியா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட முஸ்தகிம் ரிஸ்மான் (12), தனது நண்பருடன் மாலை 4 மணியளவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

இருண்ட வானிலை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் கிராமவாசிகளை உள்ளடக்கிய தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை இன்று தொடரும்.

– பெர்னாமா