கோலாலம்பூர், பிப் 16 - இவ்வாண்டு பிப்ரவரி 11ஆம் தேதி வரையிலான
காலக்கட்டத்தில் வர்த்தகக் குற்றங்களின் எண்ணிக்கை 34.3 விழுக்காடு
அதிகரித்து 4,741 சம்பவங்களாக ஆகியுள்ளது. இந்த சம்பவங்களால்
ஏற்பட்ட இழப்பின் மதிப்பு 55 கோடியே 80 லட்சம் வெள்ளியாகும்.
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் 18 கோடியே 10 லட்சம்
வெள்ளியை உட்படுத்திய 3,530 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன
என்பது குறிப்பிடத்தக்கது.
இக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட நிதி இழப்பின் மதிப்பு 207.6 விழுக்காடு
அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின்
இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.
வர்த்தக குற்றச் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் விசாரணை மற்றும்
குற்றச் செயல் தடுப்பில் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறையின்
விடாமுயற்சி மற்றும் பிரயத்தனத்தை அதிகரிக்க வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்துகிறது என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை
மொத்தம் 2,065 விசாரணை அறிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட மொத்த
விசாரணை அறிக்கைகளில் இது 49 விழுக்காடாகும் என்று இன்று இங்கு
நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது அதிக
எண்ணிக்கையாகும். கடந்தாண்டின் இக்காலக்கட்டத்தில் 1,736 விசாரணை
அறிக்கைகள் மீது மட்டுமே நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்
அவர்.
வர்த்தக மோசடிச் சம்பவங்கள் மற்றும் இழப்பின் மதிப்பு அதிகரித்து வருவது வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறைக்கு பெரும் சவாலாக விளங்குவதாகக் கூறிய அவர், வர்த்தக குற்றங்களை முற்றாகத் துடைத்தொழிப்பற்கு ஏதுவாக தடுப்பு நடவடிக்கைகளை இரடிப்பாக்க வேண்டும் என்றார்.
வர்த்தக குற்றங்களை துடைத்தொழிப்பதில் சமூகத்தின் அனைத்து
நிலையிலான மக்களும் தங்களின் பங்கினை ஆற்ற வேண்டும் என்றும்
அவர் கேட்டுக் கொண்டார்.




