நீதிபதி அஸார்ரோனி அப்துல் ரஹ்மான் முன்னிலையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எம். கோபாலகிருஷ்ணன் (வயது 39) என்ற அந்த ஆடவர் மறுத்து விசாரணை கோரினார்.
செம்பனை தோட்டத்திற்கான குத்தகை ஒப்பந்தத்தைப் பெறலாம் என்று 69 வயதான யாப் கோ செங் என்பவரை நம்பவைத்து அந்த தொகையை ஒப்படைக்க வைத்ததன் மூலம் மோசடி செய்ததாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அலோர் காஜாவில் உள்ள லெண்டு தொழிற்பேட்டையில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.
இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ரஷிடா பஹரோம் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பைக் கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரை 45,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றத்தைப் பரிந்துரைத்தார்.
எனினும், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கே ஷர்வீன், தனது கட்சிக்காரர் மாதம் 3,000 வெள்ளி சம்பளத்தில் லோரி ஓட்டுநராக பணிபுரிவதோடு ஒரு வயது முதல் 10 வயது வரையிலான ஐந்து குழந்தைகளையும் கொண்டுள்ளதால் அவருக்குக் குறைவான ஜாமின் தொகையை நிர்ணயிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
பத்தாயிரம் வெள்ளி ஜாமீனில் கோபாலகிருஷ்ணனை விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மாதம் ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதோடு அவரது அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையையும் விதித்தார்.




