புக்கிட் மெர்தாஜம், பிப் 16 - அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் வாழ்க்கைச்
செலவினம் மீதான தேசிய நடவடிக்கை மன்றக் (நக்கூல்) கூட்டத்தில்
விவாதிக்கப்படவுள்ள முக்கிய விவகாரங்களில் அரிசி மீதான
விலைக்கட்டுப்பாடும் அடங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் இன்று கூறினார்.
முன்கூட்டியே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த கூட்டம் அரிசி விலைக்
கட்டுப்பாடு உள்பட பல முக்கிய விவகாரங்களை உள்ளடக்குவதற்காக
அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இந்த நடவடிக்கை மன்றக் கூட்டத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி
வைத்துள்ளோம். இக்கூட்டத்தில் அரிசி விலைக் கட்டுப்பாடு மீது
முடிவெடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
அரிசியின் விலை மிகவும் குறைவாக இல்லாத போதிலும் அதனை
குறைக்க இயலும் என நம்புகிறேன். அரிசி விநியோகம் எங்கிருந்து
வருகிறது? குத்தகையாளர்கள் யார்? மற்றும் எவ்வளவு லாபத்தை
அவர்கள் ஈட்டுகின்றனர் என்பதை நாங்கள் ஆராயவிருக்கிறோம் என்று
அவர் தெரிவித்தார்.
இங்குள்ள பண்டார் பெட்ராவில் மடாணி மலிவு விற்பனை நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.
அதிக லாபம் ஈட்ட வேண்டாம் என இடைத்தர்களைக் கேட்டுக் கொண்ட
அவர், இதனால் பொருள் விலை ஏற்றம் காண்கிறது என்றார்.




