கோலாலம்பூர், பிப் 16 - தேசிய மோசடி நடவடிக்கை மையத்தின் (என்.எஸ்.ஆர்.சி.) அதிகாரிகள் எனக் கூறிக் கொண்ட இணைய மோசடிக் கும்பலிடம் சிக்கி முன்னாள் விரிவுரையாளர் ஒருவர் 14 லட்சம் வெள்ளியை இழந்தார்.
இந்த மோசடிக் சம்பவம் காஜாங்கில் இம்மாத தொடக்கத்தில் நிகழ்ந்ததாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.
என்.எஸ்.ஆர்.சி. அதிகாரிகள் எனக் கூறிக் கொண்ட நபர்கள் சம்பந்தப்பட்ட மோசடிச் சம்பவங்களில் இதுவே அதிகத் தொகையை உட்பட்டுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அந்த மோசடிக் கும்பல் உறுப்பினர்கள் இட்ட அத்தனை உத்தரவுகளையும் பின்பற்றிய 61 வயதான அந்த முன்னாள் பெண் விரிவுரையாளர் அக்கும்பல் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்தியுள்ளார் என்று அவர் சொன்னார்.
என்.எஸ்.ஆர்.சி. மையத்தின் அதிகாரி எனக் கூறிக் கொண்ட நபரிடமிருந்து அந்த விரிவுரையாளர் தொலைபேசி அழைப்பினைப் பெற்றுள்ளார். சட்டவிரோத இணைய இணைப்புகளையும் ஏமாற்றும் நோக்கிலான செய்திகளையும் அனுப்பிய காரணத்தால் அம்மாதுவின் தொலைபேசி எண்ணை ரத்து செய்யப்போவதாக அந்த அதிகாரி மிரட்டியுள்ளார்.
மேல் விசாரணைக்காக அந்த தொலைபேசி அழைப்பு போலீஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்ட மற்றொரு நபருக்கு மாற்றி விடப்பட்டுள்ளது என்று இன்று இங்கு நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
என்.எஸ்.ஆர்.சி. மையத்தின் தொடர்புகள் யாவும் தொலைத் தொடர்பை உட்படுத்திய ஒருவழித் தொடர்பாக மட்டுமே இருக்கும் எனக் கூறிய அவர், தொலைபேசி வழி யாரையும் அந்த மையம் அழைக்காது என்பதோடு அவ்வாறு செய்யப்படும் அழைப்புகள் போலியனவையாக இருக்கும் என்றார்.
இதனிடையே, கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை 14 லட்சத்து 90 ஆயிரத்து 582 வெள்ளி 79 காசை உட்படுத்திய என்.எஸ்.ஆர்.சி. தொடர்பான 18 விசாரணை அறிக்கைகளைத் தாங்கள் திறந்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.




