ஒருவர், இல்லாத செம்பனை தோட்ட குத்தகை ஒப்பந்ததால் ஏமாற்றப்பட்டு RM1.03
மில்லியன் இழந்துள்ளார்.
ஈப்போ, பேராக்கில் 607.04 ஹெக்டேர் நிலப்பரப்பிலும், மலாக்காவில் 485.63 ஹெக்டேர்
நிலப்பரப்பிலும் உள்ள செம்பனை தோட்டங்களுக்கான குத்தகை ஒப்பந்தத்தைப் பற்றி 69
வயதான பாதிக்கப்பட்ட நபருக்கு 'நெலியார்' என்று மட்டுமே அறியப்படும் நபர் ஒரு
தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவித்துள்ளார் என மலாக்கா காவல்துறைத் தலைவர்
டத்தோ சைனோல் சாமா தெரிவித்தார்.
ஜூலை 17 ஆம் தேதி டெண்டர் சலுகை திறக்கப் பட்டதாகச் சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இருவருக்கும் இடையிலான
கலந்துரையாடல் மூலம் பாதிக்கப்பட்டவர் டெண்டர் சலுகையில் பங்கேற்க
ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவர் பின்னர் ஒப்பந்தத்தின் அடையாளமாக RM15,000 தொகையை
டெபாசிட் செய்யும்படி கேட்டுகொள்ளப் பட்டார். மேலும் டெண்டரைப் பெற்றதற்கான
சான்றிதழை வழங்குவதாக உறுதியளிக்கப் பட்டது. ஆனால், சந்தேக நபர் டெண்டர்
தொடர்பான எந்த ஆவணங்களையும் காட்டவில்லை.
"குறிப்பிட்ட காலகட்டத்தில், பாதிக்கப்பட்டவர் மொத்தம் RM1.03 மில்லியன்களை
உள்ளடக்கிய 45 பரிவர்த்தனைகளை ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில்
செலுத்தியுள்ளார். ஆனால், இன்றுவரை எந்த ஆவணமும் அல்லது
வாக்குறுதியளிக்கப்பட்ட டெண்டரை பெற்றதற்கான சான்றிதழும் கிடைக்கவில்லை,
"என்று அவர் கூறினார். சந்தேக நபரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்
கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அலோர் காஜா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும்,
மோசடி செய்ததற்காக 420 பிரிவின் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டதாகவும்
டத்தோ சைனோல் கூறினார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில், லாரி ஓட்டுநரான 39 வயதுடைய சந்தேக நபர்,
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள காப்பாரில் கைது செய்யப்பட்டார்.
அந்த ஆறு வங்கிக் கணக்குகளும் சந்தேகநபரின் நண்பர்களுக்குச் சொந்தமான இரண்டு
நிறுவனக் கணக்குகள், அந்நபருக்கு அறிமுகமான நபர்களின் மூன்று வங்கி கணக்குகள்
மற்றும் ஒரு நிறுவனக் கணக்கு என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது
என்று கூறினார்.
- பெர்னாமா








