கோலாலம்பூர், பிப் 16 - போலீஸ் பந்துவான் எனப்படும் துணை போலீஸ்
வாகனத்திற்கு எரியூட்டி டிக் டாக் செயலி வழி அந்த காட்சியை
பதிவேற்றம் செய்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருப்பத்தைந்து வயதுடைய அந்த ஆடவர் புளோரா டாமன்சாராவில்
நேற்று காலை 10.00 மணியளவில் கைது செய்யப்பட்ட வேளையில்
அவரிடமிருந்து சுத்தியல் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட போத்தல்
ஆகியவை கைப்பற்றப்பட்டதாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி முகமது ஃபாக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
டிக் டாக் செயலியில் அதிக ரேட்டிங்கைப் பெறும் நோக்கிலும் பிறரின்
கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அந்த ஆடவர் இந்த அடாதச் செயலைப்
புரிந்து அந்த காட்சியை தனது கைப்பேசி வாயிலாக பதிவேற்றம்
செய்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று
அவர் குறிப்பிட்டார்.
முத்தியாரா டாமன்சாதார எம்.ஆர்.டி. நிலையத்திற்கு அருகே நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பிரசாரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்திற்குச்
சொந்தமான அந்த கார் மீது பின்னிரவு 1.42 மணியளவில் பெட்ரோல்
குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தீப்பற்றி எரியும் காரை பின்னணியாகக் கொண்ட காட்சியுடன்
சந்தேகப்பேர்வழி தோன்றும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப்
பகிரப்பட்டது. இந்த காரை எரித்தது குறித்து தாம் மனநிறைவு
கொள்வதாகவும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ள குறிப்பு கூறியது.
உணவு பட்டுவாடா பணியில் ஈடுபட்டுள்ள அந்த ஆடவர் மீது
மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் போதைப் பொருளை
உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறிய முகமது ஃபாக்ருடின், எனினும், அவர் முந்தைய குற்றப்பதிவு எதனையும் கொண்டிருக்கவில்லை என்றார்.
தீயிடல் மூலம் கீழறுப்புச் செயலில் ஈடுபட்டதற்காகக் குற்றவியல்
சட்டத்தின் 435 மற்றும் 427 பிரிவுகளின் கீழ் விசாரணை
மேற்கொள்வதற்காக அவரைத் தடுத்து வைப்பதற்கான நீதிமன்றம் இன்று
பெறப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.




