ஷா ஆலம், பிப் 16 - நாட்டின் தலையாய சட்ட அமைப்பாக விளங்கும்
கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை அனைத்துத் தரப்பினரும் மதிக்க
வேண்டும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்ஜின் உத்தவை மாநில அரசு ஏற்று நடக்கும்.
ஷரியா குற்றவியல் சட்டங்களை இயற்றும் விஷயத்தில் மாநில அரசு
எப்போதும் அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டி மற்றும்
கட்டமைப்புக்கு உட்பட்டு நடக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
ஷரியா சட்டங்களை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக அரசியலமைப்புச்
சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசின்
முயற்சிகளை தெளிவாக காண முடிகிறது என்று அவர் சொன்னார்.
மலேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றம்
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வாயிலாக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அரசியலமைப்புச் சட்டம், தேசிய நிர்வாக விவகாரம்
மற்றும் ஷரியா நிர்வாகம் என்ற கோணத்தில் மேன்மை தங்கிய சுல்தான்
அணுகும் பாங்கை மாநில மந்திரி புசார் என்ற முறையில் நான் ஏற்றுக்
கொள்கிறேன். இவ்விவகாரத்தை சிந்தனை வறட்சி கொண்ட சில தரப்பினர்
அரசியலாக்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் நேற்று நடைபெற்ற மலேசிய பொது
தற்காப்பு படையின் சிலாங்கூர் மாநில பிரிவின் விசுவாச ஒன்று கூடல்
நிகழ்வுக்குத் தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் கூறினார்.
நாட்டின் தலையாய சட்ட அமைப்பாக விளங்கும் காரணத்தால் கூட்டரசு
நீதிமன்றத்தின் முடிவு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் நிலையை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் நேற்று வலியுறுத்தியிருந்தார்.
கிளந்தான் ஷரியா சட்டம் தொடர்பான சிக்கல்களைப் பொறுத்த வரை,
கூட்டரசு அரசியலமைப்பின் வரையறைக்குள் ஷரியா சட்டங்களை
இயற்றுவதற்கான ஆற்றலை மாநில சட்டமன்றங்கள் விரிவுபடுத்திக்
கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கூட்டரசு அரசியலமைப்பு மற்றும்/அல்லது பிற தொடர்புடைய கூட்டரசு
சட்டங்களில் உள்ள சில விதிகளில் திருத்தங்களை பரிந்துரைப்பதற்கான
அவசியத்தை ஆராய்வதும் இதில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.
ஷரியா குற்றவியல் சட்டங்களை இயற்றுவதற்கான மாநில அரசின்
அதிகாரம் கூட்டரசு அரசியலமைப்பில் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகக்
குறிப்பிட்டுள்ளது என்பதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை
அவசியமாகிறது என அவர் குறிப்பிட்டார்.




