கோலாலம்பூர், பிப் 9 - அண்மைய காலமாக வெளிவரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கட்டொழுங்குப் பிரச்சனைகள் காவல் துறையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு அத்துறை மீதான தோற்றத்தையும் மக்களின் நம்பிக்கையையும் சீர்குலைத்துள்ளது என்று தேசிய போலீஸ் படைத்
தலைவர் (ஐ.ஜி.பி.) டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் கூறினார்.
பொது மக்களுக்கு சேவையாற்றுவதற்குரிய பொறுப்பு வழங்கப்பட்ட போலீஸ் படை உறுப்பினர்கள் என்ற முறையில், இது போன்றச் செயல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய அனைத்துத் தரப்பினரும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தினார்.
தங்களுக்கு கீழ் பணியாற்றுவோரை அனைத்துக் கோணங்களிலும் நிர்வாகம் செய்வதிலும் கண்காணிப்பதிலும் பொறுப்புடன் செயல்படும்படி எனக்கும் எல்லா நிலைகளிலும் உள்ள ஆய்வாளர்களுக்கும் நான் மறுபடியும் நினைவூட்ட விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.
தங்களின் கண்காணிப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாத மேலாளர்களுக்கு எதிராக 1993ஆம் ஆண்டு பொது அதிகாரிகள் (நடத்தை மற்றும் கட்டொழுங்கு) விதிமுறையின் 3சி பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி கடும் நடவடிக்கை எடுக்க அரச மலேசிய போலீஸ் படைத் தயங்காது என்று அவர் எச்சரித்தார்.
புக்கிட் அமான் மேலாண்மைப் பிரிவின் ஏற்பாட்டில் இங்குள்ள புக்கிட் அமானில் இன்று நடைபெற்ற ஐ.ஜி.பி.யின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.
மக்களுக்கான சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக 1993ஆம்
ஆண்டு பொது அதிகாரிகள் (நடத்தை மற்றும் கட்டொழுங்கு) விதிமுறையின் 3சி பிரிவின் விதிகளை வலுப்படுத்தும்படி அனைத்து காவல் துறை ஆணையர்கள், மாநில போலீஸ் தலைவர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் தலைவர்களை ரசாருடின் இம்மாதம் 2ஆம் தேதி
பணித்திருந்தார்.




