ஜாகர்த்தா, பிப் 9 - இம்மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும்
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் அப்பதவிக்குப் போட்டியிடும்
வேட்பாளரான பிராபோவோ சுபியான்தோ வெற்றி பெறுவதற்குத்
தேவையான 50 விழுக்காட்டு வாக்குகளை ஒரே சுற்றில் பெறுவார் என இன்று வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது.
கடந்த ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை போல்ஸ்டார் இண்டிகேட்டர்
பெலிட்டிக் இந்தோனேசியா என்ற அமைப்பு 1,200 பேரிடம் நடத்திய
கருத்துக் கணிப்பில் 51.8 விழுக்காட்டினர் தாங்கள் பிராபோவோவுக்கு
வாக்களிக்கவுள்ளதாகக் கூறியுள்ளனர்.
மேலும் 24.1 விழுக்காட்டினர் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் மற்றொரு
வேட்பாளரான அனிஸ் பாஸ்வேடானுக்கும் 19.6 விழுக்காட்டினர்
மூன்றாவது வேட்பாளரான கன்ஞ்சார் பிரானோவோவுக்கும் தங்களின்
ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய முன்னாள் இராணுவ வீரரான பிராபோவோ களம் காணும்
மூன்றாவது அதிபர் தேர்தலாக இது விளங்குகிறது. நடப்பு அதிபரான
ஜோக்கோ விடோடோவிடம் அவர் 2014 மற்றும் 2019 ஆண்டுகளில்
தோல்வி கண்டார்.
அதிபர் ஜோக்கோ விடோடோ இம் முறை அதிபர் பதவிக்கு
போட்டியிடவில்லை. இந்த அதிபர் தேர்தலில் 20 கோடியே 50 லட்சம் பேர்
வாக்களிக்கும் தகுதியைக் கொண்டுள்ளனர்.
இந்த தேர்தலில் தனது எதிராளிகளைக் காட்டிலும் பிராபோவோ
முன்னிலையில் இருப்பதை இந்தோனேசியாவின் பிரசித்தி பெற்ற
கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இன்று நடைபெறும் முதல் கட்டத்
தேர்தலில் 50 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த வேட்பாளரும் 50 விழுக்காட்டிற்கும் மேல் வாக்குகளைப் பெறாத
பட்சத்தில் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்படும்.




