கோலாலம்பூர், பிப் 9 - ஜிஞ்சாங், தாமான் பெரிங்கினில் உள்ள பட்டறை
ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்டத் தீவிபத்தில் ஒன்பது வாகனங்கள்
அழிந்தன.
இந்த தீச்சம்பவம் தொடர்பான அவசர அழைப்பை தாங்கள் இன்று
அதிகாலை 5.20 மணியளவில் பெற்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கை கமாண்டர் முகமது ஹஸ்புல்லா நயிமி முகமது
கூறினார்.
இருபத்தைந்து உறுப்பினர்கள் அடங்கிய தீயணைப்புக் குழுவினர் மூன்று
வாகனங்கள் மற்றும் ஒரு டேங்கர் லோரியுடன் சம்பவ இடத்திற்கு
விரைந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சுமார் 1,800 சதுர அடி பரப்பளவு இடத்தை உட்படுத்திய இந்த தீவிபத்தில்
நான்கு கார்கள், ஒரு லோரி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள்
அழிந்தன என்று அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்பு வீரர்கள் 29 நிமிடங்களில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வந்ததாகக் கூறிய அவர், தீக்கான காரணம் ஆராய்ப்பட்டு வருவதாகச்
சொன்னார்.




