ஷா ஆலம், பிப் 9: சீனப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முதல் இரண்டு நாள் இலவச டோல் கட்டணம் வழங்கப் பட்டதைத் தொடர்ந்து மொத்தம் 300,000 வாகனங்கள் கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் விரைவு நெடுஞ்சாலையைப் (லதார்) பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெம்ப்ளர் பார்கிலிருந்து ஈஜோக் வரையிலான 33 கிலோமீட்டர் பாதையில் சாதாரண நாட்களை விட தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக லதார் தலைமை செயல்பாட்டு அதிகாரி அஹ்மட் ஃபுவாட் அஹ்மட் ஷாஹிமி தெரிவித்தார்.
"இந்த பண்டிகை விடுமுறையின் போது அதிக எண்ணிக்கையிலான வாகனங்களைச் சமாளிக்க லதார் உண்மையில் தயாராகி வருகிறது" என்று அவர் சினார் ஹரியான் போர்டல் மூலம் தெரிவித்தார்.
இதற்கிடையில், ரோந்து அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கவும், சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்யவும், வாகனங்கள் சேதம் அல்லது விபத்துகள் ஏற்பட்டால் உதவி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.
தனியார் வாகனங்களைக் கொண்ட நெடுஞ்சாலை பயனர்கள் நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு டோல் கட்டணத்தில் இருந்து விலக்கு பெறுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்தது.




