ஈப்போ, பிப் 9- இம்மாதம் 3ஆம் தேதி வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில்
சிப்பாங் பூலாய்-தாப்பா இடையே ஆம்புலன்ஸ் வாகனத்தை அமைச்சர்
ஒருவரின் அதிகாரப்பூர்வக் கார் ஆபத்தான முறையில் பின் தொடர்ந்ததாகக்
கூறப்படும் சம்பவம் தொடர்பில் அக்கார் ஓட்டுநரிடம் போலீசார்
வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
சாலை விபத்தின் போது நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காட்சிகள்
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும்
அதிருப்தியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பில் அன்றைய தினமே காவல் துறையில் புகார்
செய்யப்பட்டதாகப் பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது
யூஸ்ரி ஹசான் பாஸ்ரி தெரிவித்தார்.
அந்த ஓட்டுநர் அமைச்சர் ஒருவரிடம் பணிபுரிவது தொடக்கக் கட்ட
விசாணையில் தெரியவந்துள்ளதாகக் கூறிய அவர், இச்சம்பவம் நிகழ்ந்த
போது அமைச்சர் ஈப்போ, ஜாலான் சீலாங்கில் உள்ள அடுக்குமாடி
குடியிருப்பு ஒன்றில் நடைபெற்ற சமூக நல நிகழ்ச்சியில் கலந்து
கொள்ளச் சென்று கொண்டிருந்ததாகச் சொன்னார்.
இந்த விசாரணைக்கு உதவ இதர சாட்சிகளை தாங்கள் அழைத்துள்ளதோடு
ஆம்புன்ஸ் வாகனத்தின் டாஷ்போர்டு கேமரா மற்றும் பிளஸ்
நிறுவனத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கோரியுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் 1959ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து
விதிகளின் 9(2) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
என்றார் அவர்.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் தாம் அறிக்கை ஒன்றை
வெளியிடவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்
முன்னதாகக் கூறியிருந்தார்.
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வடக்கு-தெற்று நெடுஞ்சாலையின் 228.1வது
கிலோ மீட்டரில் நிகழ்ந்த மூன்று லோரிகள் உள்பட எழு வாகனங்கள்
சம்பந்தப்பட்ட கோர விபத்தின் காரணமாக அந்த நெடுஞ்சாலையில்
மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.




