கோலாலம்பூர், பிப் 9- தலைநகர் புடு, ஜாலான் பாசார் பாருவில் உள்ள
கைவிடப்பட்ட ஹோட்டல் ஒன்றில் போலீசார் நேற்றிரவு மேற்கொண்ட
‘ஓப் நோடா‘ சோதனை நடவடிக்கையில் 229 ஆண்களும் 34 பெண்களும்
கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 40 வயது வரையிலான சீனா,
நேப்பாளம், பாகிஸ்தான், இந்தியா, வியட்னாம், தாய்லாந்து,
இந்தோனேசியா மற்றும் உள்நாட்டைச் சேர்ந்தவர்களாவர் என்று
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட்
கூறினார்.
கைது செய்யப்பட்ட 34 பெண்களில் 20 பேர் விலைமாதர்கள் என்றும்
எஞ்சியோர் அந்த ஹோட்டல் அறைகளை வாடகைக்கு எடுத்து
தங்கியுள்ளவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த கட்டிடத்தின் பெரும் பகுதியில் அந்நிய நாட்டினர் வாடகைக்கு
இருந்துள்ளதோடு அங்கு விபசார நடவடிக்கைளும் நடைபெற்று
வந்துள்ளன என்று ‘ஓப் நாடா‘ சோதனை தொடர்பில் இங்கு நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
அந்த விலைமாதர்கள் ஹோட்டலின் வரவேற்புக் கூடத்தில் இருந்தவாறு
வாடிக்கையாளர்களைத் தேடுவது வழக்கம் எனக் கூறிய அவர், கிடைக்கும்
வாடிக்கையாளர்களை மேல் மாடிக்கு அழைத்துச் சென்று சேவைக்கான
கட்டணமாக வெ.50 முதல் வெ.100 வரை வசூலிப்பர் என்றார்.
இந்த சோதனையில் மேலும் 14 அந்நிய நாட்டுச் சிறார்களும் பிடிபட்டனர்.
ஆவணச் சோதனை நடவடிக்கைகாக அவர்கள் அனைவரும் கோலாலம்பூர்
போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என அவர்
தெரிவித்தார்.
இச்சோதனையில் முறையான ஆவணங்களை வைத்திருக்கும் அந்நிய
நாட்டினர் விடுவிக்கப்படுவர். மேலும் போதைப் பழக்கம் உள்ளவர்களைக்
கண்டறிவதற்காக அவர்கள் அனைவரிடமும் சிறுநீர் சோதனை
மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.




