கோலாலம்பூர், பிப் 9- சீனப்புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள
நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி பொது மக்கள் சொந்த ஊர்களுக்கும்
சுற்றுலாவுக்கும் செல்வதால் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் வாகனப்
போக்குவரத்து அதிகரித்துள்ளது.
சுங்கை பூலோ முதல் ரவாங் செலாத்தான் வரையிலும் ரவாங்
செலத்தானிலிருந்து ரவாங் வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகரும்
வேளையில் சிலிம் ரிவர் முதல் சுங்காய் வரையிலான பகுதியில்
போக்குரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தனது அதிகாரப்பூர்வ
எக்ஸ்பிளஸ் பக்கத்தில் பிளஸ் நிறுவனம் கூறியது.
25வது கிலோ மீட்டரில் ஏற்பட்ட விபத்து காரணமாகப் புத்ரா
ஜெயாவிலிருந்து பண்டார் கமுடா கோவ் வரையிலும் ஸ்கூடாய் முதல்
செடேனாக் வரையிலும் போக்குவரத்து நெரிசல்மிகுந்து காணப்படுகிறது.
இதனிடையே, கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கு கரைக்குச் செல்லும்
சாலையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ள வேளையில் கெந்திங்
செம்பாவிலிருந்து புக்கிட் திங்கி வரையிலானப் பகுதியில் மட்டுமே
போக்குரத்து நெரிசல் காணப்படுகிறது என்று மலேசிய நெடுஞ்சாலை
வாரியத்தின் (எல்.எல்.எம்.) பேச்சாளர் ஒருவர் பெர்னாமாவிடம்
தெரிவித்தார்.
மேலும் 42.5வது கிலோ மீட்டரில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இடது
தடத்தில் போக்குவரத்து தடைபட்டுள்ளது என அவர் சொன்னார்.
இன்று பிற்பகல் மற்றும் மாலை வேளையில் வாகனப் போக்குவரத்து
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தங்கள் பயணத்தை
முன்கூட்டியே திட்டமிடும்படி வாகனமோட்டிகளுக்கு அவர் அறிவுரை
கூறினார்.




