ஈப்போ, பிப் 9- கெராத்தாப்பி தானா மிலாயு பெர்ஹாட் (கே.டி.எம்.பி.) நிறுவனத்தின் திறந்த கட்டண முறையை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நேற்று தொடக்கி வைத்தார். கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நாட்டின் தென் பிராந்தியத்தில் உள்ள 80 இரயில் நிலையங்களில் இந்த கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திறந்த கட்டண முறையின் வாயிலாக பயணிகள் தானியங்கி கட்டுப்பாட்டு கதவுகளில் டெபிட், கிரடிட் கார்டுகள் மற்றும் இ-வாலட்டுகளைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்தலாம். இந்த பரிவர்த்தனையை மேற்கொள்ள ஒன்று முதல் ஐந்து விநாடிகள் மட்டுமே போதுமானது என்று அந்தோணி லோக் சொன்னார்.
இந்த திறந்த கட்டண முறை இ.டி.எஸ். தவிர்த்து கொம்யூட்டர் எனப்படும் பயணிகள் இரயில் சேவையில் மட்டுமே அமல்படுத்தப்படும். இ.டி.எஸ் சேவையில் இருக்கைத் தேர்வை உட்படுத்திய இணைய டிக்கெட் கொள்முதல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள ஈப்போ இரயில் நிலையத்தில் இந்த திறந்த கட்டண முறையை அறிமுகப்படுத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கே.டி.எம்.பி. தலைமை வர்த்தக அதிகாரி சுஹாய்மி யாக்கோப்பும் கலந்து கொண்டார்.
முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய லோக், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திறந்த கட்டண முறையை மேம்படுத்தும் திட்டம் கடந்தாண்டில் முற்றுப் பெற்றதாகக் கூறினார்.
இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை கே.டி.எம்.பி. அரசாங்கத்தின் உதவியின்றி சொந்தமாகவே திரட்டியது. கே.டி.எம்.பி.யின் இந்த முற்போக்கான, துல்லியமான மற்றும் விரைவான திட்டமிடலுக்கு எங்களின் வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு பெருநாளுக்குப் பின்னரும் கூடுதலாக இ.டி.எஸ். சேவைகளை மேற்கொள்ள போக்குவரத்து அமைச்சு பரிசீலித்து வருகிறது என்றும் அவர் சொன்னார்.








