சிரம்பான், பிப் 8: கடந்த திங்கட்கிழமை நீலாயில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 11 மாதப் பெண் குழந்தையைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செவ்வாய்கிழமை மாலை 6.12 மணியளவில் பாதிக்கப்பட்ட குழுந்தையின் 20 வயது மதிப்புத்தக்க தாயிடமிருந்து இச்சம்பவம் குறித்து தனது தரப்புக்குப் புகார் கிடைத்ததாக நீலாய் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிடெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.
சிசிடிவி காட்சிகளை மறு ஆய்வு செய்ததில், அக்குழந்தை பராமரிப்பு மையத்தின் பராமரிப்பாளராக இருக்கும் 66 வயது பெண் ஒருவர் குறிப்பிட்ட குழந்தையின் தலையில் அடித்திருப்பது கண்டறியப்பட்டது.
"குழந்தைக்குக் கண் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குக் காரணம் கடினமான பொருளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவ நிபுணரின் பரிசோதனை முடிவுவில் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் 12.30 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். மீளாய்வு செய்ததில் அவருக்கு குற்றப் பின்னணி எதுவும் இல்லை எனவும் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை எனவும் அப்துல் மாலிக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அக்குழந்தை பராமரிப்பு மையம் சுமார் 20 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், அதன் ஸ்தாபனத்திற்கு நெகிரி செம்பிலான் சமூக நலத்துறை ஒப்புதல் அளித்ததாகவும் கூறினார்.
இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுத்து வைப்பிற்கு விண்ணப்பம் செய்யப்படும் என்றும், குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1) (ஏ) இன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
– பெர்னாமா




