கோலாலம்பூர், பிப் 8: சீனப் புத்தாண்டின் நீண்ட விடுமுறையால் ஏற்படும் வாகனங்களின் அதிகரிப்பைத் தொடர்ந்து பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி, பெர்மாதாங் பாவ்-பிராய், சிலிம் ரிவர்-சுங்காய், செத்திய ஆலம்-ஷா ஆலம் மற்றும் பண்டார் கமுடா கோவ்-பண்டார் சௌஜானா புத்ரா ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாகப் பிளாஸ் மலேசியா பெர்ஹாட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாட்டின் தெற்குப் பகுதியில், ஆயர் கெரோ -ஜாசிங்கில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன. அதே நேரத்தில் கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலைகளான (LPT 1), LPT 2, சுங்கை பீசி பிளாஸ் டோல், ஸ்கூடாய் பிளாஸ் டோல் (இரண்டு வழிகள்) ஆகியவற்றில் போக்குவரத்து சீராக உள்ளது என மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
"வேலை நேரம் முடிந்ததும் பிற்பகலில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இலவச டோல் கட்டண வசதியைப் பயன்படுத்த மக்கள் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்," என்று அவர் கூறினார்.
1-800-88-0000 என்ற பிளாஸ்லைன் மற்றும் www.twitter.com/plustrafik ட்விட்டர் பக்கம் அல்லது மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தொடர் எண் 1-800-88-7752 மற்றும் ட்விட்டர் மூலம் பொதுமக்கள் சமீபத்திய போக்குவரத்துத் தகவலைப் பெறலாம்.
- பெர்னாமா




