கோலாலம்பூர், பிப் 8- சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜே.பி.ஜே.) சாலை பயன்பாடு தர நிர்ணயத்தைப் பூர்த்தி செய்யத் தவறிய 13 விரைவு பேருந்துகளுக்குச் சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனப் புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஓப்ஸ் டெர்மினல் சோதனையின் போது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சாலை போக்குவரத்து இலாகாவின் அமலாக்கப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமஹான் கூறினார்.
இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நாடு முழுவதும் உள்ள 28 பஸ் முனையங்களில் 2,801 பஸ்கள் மீது தாங்கள் சோதனை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
பயணிகள் பயன்படுத்தும் பேருந்துகள் எந்த பிரச்சனையுமின்றி சிறப்பான முறையில் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள செலாத்தான் ஒருங்கிணைந்த பஸ் முனையத்தில் நேற்று நடத்தப்பட்ட சிறப்பு ஓப்ஸ் டெர்மினல் நடவடிக்கையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையில் 44 பஸ்கள் மீது சோதனை நடத்தப்பட்டு அவற்றில் 13 பஸ்கள் சேவையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டது. அந்த பஸ்களில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் மோசமாக இருந்ததோடு நிர்ணயிக்கப்பட்ட தரத்தையும் கொண்டிருக்கவில்லை என்றார் அவர்.
மேலும் இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக 187 பஸ் ஓட்டுனர்கள் மீது சிறுநீர் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் நால்வர் தடை செய்யப்பட்ட வஸ்துகளைப் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது தொடர்ந்து மேல் நடவடிக்கைக்காக அவர்கள் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டனர் என்று அவர் கூறினார்.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காகப் பஸ்களின் டயர், பிரேக், மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான தொழில்நுட்ப சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன என அவர் சொன்னார்.




