ஈப்போ, பிப் 8: நேற்று பிடோருக்கு அருகில் உள்ள கம்போங் போவில் ஏற்பட்ட நீர் சுழற்சி சம்பவத்தில் நான்கு பேர் காணாமல் போயுள்ள நிலையில், ஒரு பெண் நீரில் மூழ்கி இறந்தார்.
அப்பெண்ணின் உடலைக் கிராம மக்கள் சம்பவ இடத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுத்தனர் என மலேசிய பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குனர் சயானி சைடோன் கூறினார்.
அந்த நால்வரில் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்குவர் என அவர் கூறினார், அதே நேரத்தில் ஒரு பெண்ணும் 12 வயது குழந்தையும் இச் சம்பவத்தில் இருந்து தப்பினர்.
"இச்சம்பவம் தொடர்பாகப் பிடோர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு (பிபிபி) மாலை 4.03 மணி அளவில் அழைப்பு வந்துள்ளது. அதனைத் தொடந்து, ஒன்பது நிமிடங்களுக்குள் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை வந்தடைந்தனர்.
"பாதிக்கப்பட்ட அனைவரையும் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பெர்னாமா-




