சிப்பாங், பிப் 8 - அதிக எடையை ஏற்றும் கனரக வாகனங்கள் பெரும் பிரச்சனையாகவும் சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் விளங்குவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
அதிக எடையை ஏற்றும் விவகாரம் நீடித்த ஒரு பிரச்னையாக விளங்குவதால் கடும் நடவடிக்கைகளை உட்படுத்திய அமலாக்க நடைமுறைகள் மூலம் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
ஆகவே, நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றாக அதிக எடை ஏற்றும் விவகாரம் விளங்குகிறது. இதற்காக நாம் அமலாக்க நடவடிக்கைகளை அதிகரிக்க விடுக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்தில் கோலாலம்பூரிலிருந்து சிபு செல்லும் ஏர் பாத்தேக் விமானப் பயணிகளை வழியனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சீரான மற்றும் ஆக்ககரமான முறையில் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சிறப்பு சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்படி சாலை போக்குவரத்து இலாகாவை (ஜே.பி.ஜே.) தாம் வலியுறுத்தியுள்ளதாக லோக் சொன்னார்.
கடந்தாண்டின் மூன்றாவது காலாண்டிலிருந்து அமலாக்க நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப் படுவதோடு அண்மை மாதங்களாக அதன் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் வழி வர்த்தக வாகன நடத்துநர்களுக்கு வழங்கப்படும் குற்றப்பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார் அவர்.
இதனிடையே, விமானத் துறையின் செயல்பாடுகள் குறித்து கருத்துரைத்த அமைச்சர், தேவை தொடர்ந்து வலுவாக இருந்து வருவதோடு பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.




