சிப்பாங், பிப் 8 - சேவை நிறுத்தப்பட்ட விமான நிறுவனமான மைஏர்லைன் சென். பெர்ஹாட்டின் புதிய சாத்தியமுள்ள முதலீட்டாளர்கள் போக்குவரத்து அமைச்சை சந்தித்துள்ளனர். இருப்பினும், அதன் வர்த்தக முடிவுகள் யாவும் அதன் நிர்வாகத்தைப் பொறுத்ததாகும் என்று அமைச்சு கூறியுள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்த வரை, மலேசியா வான் போக்குவரத்து ஆணையம் (மேவ்கோம்) மற்றும் மலேசிய சிவில் வான் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றிடம் உரிய அனுமதிக்கு விண்ணப்பம் செய்வது உள்பட நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதே முக்கியமானதாகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
தொழில்நுட்ப அங்கீகாரத்திற்காக வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் அனைத்து விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எனினும், தற்போது வரை அவர்களிடமிருந்து எந்த விண்ணப்பமும் கிடைத்ததாகத் தகவல் இல்லை என்று அவர் சொன்னார்.
இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கோலாலம்பூரிலிருந்து சிபு செல்லும் பாத்தேக் ஏர் விமானப் பயணிகளை வழியனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நிறுவனப் பங்குகளில் 51 விழுக்காட்டை உள்நாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு எஞ்சிய 49 விழுக்காட்டுப் பங்குகளை மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் வைத்திருக்க முடியும் என்ற நாட்டின் வான் போக்குவரத்து கொள்கையை தாம் மைஏர்லைன் நிறுவனத்திடம் தெளிவுபடுத்தி விட்டதாகவும் அவர் சொன்னார்.
மத்திய கிழக்கைச் சேர்ந்த முதலீட்டாளருடன் கடந்தாண்டு டிசம்பர் 23ஆம் தேதி விற்பனைக் கொள்முதல் ஒப்பந்தத்தில் மைஏர்லைன் கையெழுத்திட்டதாகக் கடந்த மாதம் 12ஆம் தேதி செய்தி வெளியானது.
இதன் மூலம் இவ்வாண்டு மத்தியில் விமானச் சேவையை மைஏர்லைன் தொடர்வதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.




