NATIONAL

சீனப்புத்தாண்டின் போது 24 லட்சம் வாகனங்கள் சாலையைப் பயன்படுத்தும் - நெடுஞ்சாலை வாரியம் கணிப்பு

8 பிப்ரவரி 2024, 2:05 AM
சீனப்புத்தாண்டின் போது 24 லட்சம் வாகனங்கள் சாலையைப் பயன்படுத்தும் - நெடுஞ்சாலை வாரியம் கணிப்பு

புத்ராஜெயா, பிப் 8- சீனப்புத்தாண்டை முன்னிட்டு சாலையைப்

பயன்படுத்தும் வாகனங்களின் தினசரி எண்ணிக்கை இன்று தொடங்கி 24

லட்சம் வரை உயரும் என மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.)

எதிர்பார்க்கிறது.

அதில் சுமார் 15 லட்சம் வாகனங்கள் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையையும்

(பிளஸ்) 199,000 வாகனங்கள் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையையும்

106,000 வாகனங்கள் கிழக்குக்கரை நெடுஞ்சாலை 1யையும் 61,000

வாகனங்கள் கிழக்குக்கரை நெடுஞ்சாலை 2யையும் பயன்படுத்தும் என்று

அந்த வாரியம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த வாகன எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு

வாகனமோட்டிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக

அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யும்படி நெடுஞ்சாலை பராமரிப்பு

நிறுவனங்களைத் தாங்கள் பணித்துள்ளதாக அது குறிப்பிட்டது.

இம்மாதம் 4 முதல் 14 வரை அவசர வேளைகள் தவிர்த்து இதர

சமயங்களில் வழித்தடங்களை போக்குவரத்துக்கு மூட வேண்டாம் என்று

ஒப்பந்த நிறுவனங்களை நாங்கள் பணித்துள்ளோம். பிளஸ்

நெடுஞ்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் விவேக

தடங்களைச் செயல்படுத்தும் அதேவேளையில் கோலாலம்பூர்-காராக்

நெடுஞ்சாலையில் போக்குவரத்து பகிர்வு தடங்களை ஏற்படுத்தும்படியும்

கேட்டுக் கொண்டுள்ளோம் என அவ்வறிக்கை குறிப்பிட்டது.

அனைத்து டோல் சாவடிகளிலும் கட்டண வசூல் முறை சீராகச்

செயல்படுவதை ஒப்பந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்

என்பதோடு வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் தற்காலிக

டோல் கட்டண வசூலிப்புத் தடங்கள் திறக்கப்பட வேண்டும் எனவும்

எல்.எல்.எம். வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே சீனப்புத்தாண்டை முன்னிட்டு இரு தினங்களுக்கு அதாவது

பிப்ரவரி 8ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி

இரவு 11.59 மணி வரை இலவச டோல் கட்டணச் சலுகை

வழங்கப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா

லிங்கி நேற்று கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.