ஷா ஆலம், பிப் 8 - ‘பாடு‘ எனப்படும் முதன்மை தரவுத் தளத்தில் பதிவு
செய்ய சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அரசு ஊழியர்கள்
ஊக்குவிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
எதிர்காலத்தில் மானியத் திட்டங்களை அமல்படுத்துவதற்கும் அரசாங்கத்
திட்டங்களை மேற்கொள்வதற்கும் துல்லியமான தகவல்களை இந்த தரவுத்
தளம் வழங்கும் என்று அவர் சொன்னார்.
மாநிலத்தில் ஊராட்சி மன்றங்களில் பணியாற்றுவோர் உள்பட மொத்தம்
27,378 அரசு ஊழியர்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பதிவு செய்ய அரசு ஊழியர்களை நாங்கள்
ஊக்குவிக்கிறோம். இங்குள்ள அரசு ஊழியர்களில் சிலர் மத்திய அரசின்
கீழ் பணியாற்றும் நிர்வாக மற்றும் அரச தந்திர அதிகாரிகளாக
உள்ளனர். இந்த ‘பாடு‘ திட்டத்தில் பதிவு செய்யக் கோரும் உத்தரவு
அவர்களுக்கும் சில வாரங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டதாக
அறிகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற
ஊழலுக்கு எதிரான திட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்வில்
கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இந்த பாடு தரவுத் தளத்தில் பதிவு செய்வதற்கு பொது மக்களுக்கு கடந்த
மாதம் 2ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.




