அம்பாங் ஜெயா, பிப் 7: மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு 500 மூட்டை கரிம உரங்கள் விநியோகித்தது மூலம் ரஹ்மா உர உதவியைப் பெற்ற முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது.
உரத்தின் திடீர் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமையைக் குறைக்கும் வகையில் யாயாசான் ரஹ்மா மலேசியா இந்த உர மூட்டைகளை வழங்கியுள்ளது என விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் தெரிவித்தார்.
"இப்போது உரங்களின் அதிகப்படியான விலை உயர்வால், தங்கள் வரவு செலவைக் குறைக்க வேண்டி பயிர்களுக்கான உரத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் பயிர்கள் குறைந்த வளம் பெறுகின்றன.
"விவசாயிகள் தரமான உரங்களைப் பெற்று, பயிர் விளைச்சலை அதிகரிக்க, மாநில அரசும் இலவச உரங்கள் அல்லது அதன் விலையைக் குறைக்க நிறைய மானிய ஒதுக்கீடு வழங்குகிறது," என்று அவர் கூறினார்.
பண்டான் இண்டாவில் உள்ள அம்பாங் ஜெயா நகராண்மை கழக மண்டபத்தில் (எம்பிஏஜே) மாநில அளவில் ரஹ்மா உரத்தின் விநியோக விழாவுக்கு இஷாம் தலைமை தாங்கினார்.
இதற்கிடையில்,உர உதவித்திட்டத்தில் சிலாங்கூர் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இங்கு அதிகமாக உள்ள விவசாய சந்தைகளே காரணம் என மலேசியாவின் யாயாசான் ரஹ்மா தலைவர் கூறினார்.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு 5,000 கரிம உரங்கள் விநியோகம் செய்யும் முயற்சி மற்ற மாநிலங்களுக்கும் தொடரும் என முகமட் புகாரி பச்சோக் தெரிவித்தார்.
"நாங்கள் கொடுக்கும் உரம் அனைத்து வகையான செடிகளுக்கும் ஏற்றது. இது சிறந்த நவீன முறையில் பதப்படுத்தப்பட்டு விவசாயிகள் பயிர்களைப் பெருக்க உதவும்," என்றார்.




