புத்ராஜெயா, பிப் 7 - செய்திகளைச் சரிபார்ப்பது உள்ளிட்ட பல அம்சங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் ஊடகவியல் நெறிமுறை கையேட்டை தகவல் தொடர்பு அமைச்சு இம்மாதம் வெளியிடவுள்ளது.
அந்தக் கையேட்டை வெளியிடுவதற்கு முன்னர் சில ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் தகவல் இலாகாவுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டதாக அதன் அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் கூறினார்.
இக்கையேட்டை வெளியிடுவதற்கான பொருத்தமான தேதியை நாங்கள் சீனப் புத்தாண்டுக்குப் பிறகு கண்டறிவோம். தேதி நெருங்கும் தருணத்தில் மேலும் சில ஆய்வுக்குப் பின்னர் அதன் உள்ளடக்கத்தை இன்னும் அதிகமாகப் பகிர்ந்து கொள்வோம் என்று அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தகவல் தொடர்பு அமைச்சின் ஊழியர்கள் மத்தியில் மத்திய தரவுத்தள மையத்தின் (பாடு) பதிவு குறித்து கேட்ட போது, முன்பை விட மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என ஃபாஹ்மி கூறினார்.
குடும்பத் தலைவர்களாக இருக்கும் சில அரசு ஊழியர்களுக்குத் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பதிவு செய்ய சிறிது நேரம் ஆகலாம். ஆனால் முதல் படி பதிவு ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.
விரிவான, பாதுகாப்பான, இலக்கவியல் மயமாக்கலை நோக்கிய மற்றும் துல்லியமான பகுப்பாய்வு உருவாக்கத்தை இலக்காக் கொண்ட நாட்டின் முதன்மை தரவுத்தளத்தை அரசாங்கம் கடந்த ஜனவரி 2ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
தகுதியான குடிமக்கள் இலக்கிடப்பட்ட மானியங்கள், உதவிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை பெறும் வாய்ப்பை தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மலேசியர்கள் கணினி வாயிலாக (https://www.padu.gov.my) இதில் பதிவுசெய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.




