புத்ராஜெயா, பிப் 7- நீர் சூழியல் முறையில் உருமாற்றத்தை எரிசக்தி
மாற்றம் மற்றும் பொது பயன்பாட்டுத் துறை அமைச்சு மேற்கொள்கிறது.
தூய்மையான மற்றும் நீடித்த நீர் விநியோகத்தை உறுதி செய்யும்
நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அமைச்சின் முக்கிய பணி இலக்குகளில் ஒன்றாக இது விளங்குகிறது
என்று அதன் அமைச்சர் பாடில்லா யூசுப் நேற்று இங்கு நடைபெற்ற
அமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றும் போது
கூறினார். அமைச்சரின் உரை அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில்
நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
பயனீட்டாளர்கள் சுத்தமான நீரை பெறுவதற்கு ஏதுவாக நீர் வளங்கள்,
ஆற்று மேலாண்மை, வெள்ளக் கட்டுப்பாடு, கழிவு நீர் நிர்வாகம் உள்ளிட்ட
விவகாரங்களில் விரிவான உருமாற்றம் நீர் விநியோக மேலாண்மைக்குத்
தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
எதிர்காலத் தலைமுறைக்குச் சுத்தமான ஆற்று நீர் பாரம்பரியத்தை விட்டுச்
செல்வதற்கு ஏதுவாக பருவகால மற்றும் திடீர் வெள்ள மேலாண்மையின்
அமலாக்கவும் அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.
குடிநீர்க் கட்டண உயர்வுக்கு ஏற்ப நீரின் தரமும் உயர்த்தப்பட வேண்டும்
என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாகும். வளங்களை மேலாண்மை
செய்வதில் தெளிவான இலக்கு, ஆக்கரமான அமலாக்கம் இல்லாவிடில்
அது நமக்குப் பெரும் சவாலாக விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எளிதாக அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைச்சின் பெயர் எரிசக்திமாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு என மாற்றம் செய்யப்படவேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைமாற்றத்தின் போது இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சு இரண்டாகப் பிரிக்கப்பட்டு எரிசக்தி மற்றும் பொது பயன்பாட்டுத் துறை அமைச்சு உருவாக்கப்பட்டது.




