கோல நெருஸ், பிப் 6 - விரைவில் மணம் புரியவிருந்த இளைஞர் ஒருவர
தன் நண்பருடன் ரிமோட் கண்ட்ரோல் எனப்படும் தொலை இயக்க விசைப்
படகு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இத்துயரச் சம்பவம் இங்குள்ள கம்போங் புக்கிட் தும்போ ஆற்றில்
நேற்றிரவு நிகழ்ந்தது.
அகமது யூசுப் டின் (வயது 24) என்ற அந்த இளைஞரின் சடலம் இன்று
விடியற்காலை 12.56 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கோல
நெருஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் நிலையத்தின் தலைவர் அஸ்மி
ஓமார் கூறினார்.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் 12 மீட்டர் ஆழத்தில்
அந்த ஆடவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக
அவரது உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பெர்னாமா
தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து நேற்று இரவு 10.55
மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாகக் கூறிய அவர், மொத்தம் 16
பேர் அடங்கிய தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடி
மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சொன்னார்.
இதனிடையே, ஆற்றின் நடுவே பழுதடைந்த படகை மீட்பதற்காக நீந்திச்
சென்ற போது அகமது யூசுப் நீரில் மூழ்கியதாக சம்பவ இடத்திலிருந்த
அவரின் சகாவான முகமது டேனியல் ஹஃப்ரிஷ் அப்துல் ஹலிம்
கூறினார்.
ஆற்றின் நடுவே இருந்த போது திடீரென தசைப் பிடிப்பு ஏற்பட்டு நீந்த
முடியாத நிலையில் அவர் உதவிக் கோரி கூச்சலிட்டார். நான் உடனே
ஆற்றில் குதித்து அவரைக் காப்பாற்ற முயன்றேன். எனினும் எனது
முயற்சி பலனளிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.




