ஈப்போ, பிப் 6 - பீடோரில் உள்ள குடிநுழைவு துறையின் தற்காலிக தடுப்புக் காவல் முகாமில் இருந்து தப்பிய கைதிகளில் 86 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.
இம்மாதம் முதலாம் தேதி தொடங்கி இதுவரை 64 பேரை காவல்துறையினர் 22 பேரை குடிநுழைவு துறையினர் கைது செய்துள்ள வேளையில் மேலும் 43 பேரை வலை போட்டு தேடி வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
இன்று அதிகாலை அரச மலேசிய போலீஸ் படையின் சிறப்பு நடவடிக்கை குழு மற்றும் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 26 சட்டவிரோத ரோஹிங்கியா குடியேறிகள் மீண்டும் கைது செய்யப்பட்டதாக இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் 326.2 கிலோமீட்டர் பகுதி தாப்பா ஓய்வு பகுதி, பெல்கிரா சுங்கை கெம்பால் பீடோர், தாப்பா, கேனோ பூர்வக் குடியினர் கிராமம் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.
தடுப்புக் காவல் முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்கள் மீண்டும் பிடிப்பதில் உதவும்படி பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், நடப்பு சூழலை மோசமாக்கும் வகையில் ஆருடங்கள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளும்படி வலியுறுத்தினார்.
தப்பியோடிய ரோஹிங்கியா கைதிகள் அனைவரும் மீண்டும் கைது செய்யப்படும் வரை தேடுதல் நடவடிக்கையை தாங்கள் தொடரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பீடோரில் உள்ள குடிநுழைவுத் துறையின் தற்காலிகத் தடுப்புக் காவல் முகாமிலிருந்து 131 ரோஹிங்கியா மற்றும் மியன்மார் பிரஜைகள் கடந்த வியாழக்கிழமை இரவு 9.50 மணியளவில் தப்பினர்.




