புத்ராஜெயா, பிப் 6 - கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழ்ப்பட்ட ஒப்பந்த
பணியாளர்கள் உள்பட அனைத்து பொதுச்சேவை ஊழியர்களும் 2,000
வெள்ளியையும் பொதுச் சேவைத் துறையின் முதன்மை பதவி
வகிப்பவர்களுக்கு 1,000 வெள்ளியையும் உள்ளடக்கிய தொடக்க கட்ட
ஊக்கத் தொகை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டத்தில்
வழங்கப்படும்.
இன்று இங்குள்ள நிதியமைச்சில் நடைபெற்ற அமைச்சின் ஊழியர்களின்
மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
மேலும் போலீஸ், தீயணைப்புத் துறை, ஆயுதப்படை மற்றும் அனைத்து
சீருடைப் பணியாளர்களை உள்ளடக்கிய முதன்மை பொதுச்சேவைத்
துறையின் அனைத்து பணியாளர்களுக்கும் தலா 1,000 வெள்ளி
வழங்கப்படும் என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.
இது தவிர, ஓய்வு பெற்ற அரசாஙகம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம்
பெறும், ஓய்வூதியம் பெறாத முன்னான் இராணுவ வீரர்களுக்கும் 1,000
வெள்ளி வழங்கப்படும் என்ற அவர் சொன்னார்.
பொதுச் சேவைத் துறையின் புதிய சம்பள முறை மீதான ஆய்வு
(எஸ்.எஸ்.பி.ஏ.) முற்றுப் பெறும் வரை இந்த சிறப்பு ஊக்கத் தொகை அரசு
ஊழியர்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த எஸ்.எஸ்.பி.ஏ. ஆய்வின் இறுதி அறிக்கை இன்னும் இரு
மாதங்களில் முழுமை பெறும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர்
அவ்வறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும்
என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தலைமைச் செயலாளர டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலி மற்றும்
பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ வான் அகமது வான் டாஹ்லான் அப்துல் அஜிஸ் ஆகியோருடன் இணைந்து அரசு ஊழியர்கள் சம்பள மறுசீரமைப்பு பணிகளைத் தொடக்கி விட்டேன்.
அவர்களும் இந்த சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.




