கோலாலம்பூர், பிப் 6: கடந்த செப்டம்பரில் முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டமான 'ACCERX' மூலம் ஏமாற்றப்பட்ட நிறுவன இயக்குநர் RM11,130,123 இழந்தார்.
இதுவரை முதலீட்டுத் திட்டம் தொடர்பான வழக்கில் ஒரு தனி நபருக்கு ஏற்பட்ட இழப்புகளில் இதுவே மிக அதிகமான இழப்பாகும் என புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இணை இயக்குநர் (விசாரணை) டத்தோ ரோஹைமி முகமட் இசா கூறினார்.
"இச்சம்பவம் தொடர்பாக 60 வயது நபர் ஜனவரி 30 அன்று செந்தூலில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். அதைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த நவம்பரில் நாடு முழுவதும் உள்ள முதலீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 124 புகார்களைப் பெற்றுள்ளதாகவும், இதில் மொத்தமாக RM90,364,463.08 இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட 73 நிறுவனங்கள், 83 வங்கிக் கணக்குகள் மற்றும் ஒரு தனிப்பட்ட வங்கிக் கணக்கு ஆகியவற்றை விசாரணையில் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
அதே நேரத்தில், இந்த முதலீட்டுத் திட்டத்தில் இன்னும் தொடர்பு உள்ள நபர்கள்அதனை நிறுத்திவிட்டு ஏமாற்றப்படுவதை தவிர்க்க அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு ரோஹைமி அறிவுறுத்தினார்.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள், அவ்வாறு செய்வதற்கு முன் அச்சேவையின் சட்டபூர்வமான தன்மையைச் சரிபார்க்கவும்.
– பெர்னாமா




