குவாந்தான், பிப் 6: கடை உதவியாளர் ஒருவர் இல்லாத முதலீட்டால் ஏமாற்றப்பட்டு 5,21,000 ரிங்கிட் நஷ்டம் அடைந்துள்ளார்.

கடந்த டிசம்பரில், 39 வயது நபர், 15 சதவீத லாபம் தருவதாக உறுதியளித்த பங்கு  திட்டத்தில் சேர எண்ணம் கொண்டார், என பகாங் காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்  முகநூல்  வழி அறிமுகமான  முதலீட்டில் RM50,000 முதலீடு செய்த பிறகு RM1,000 லாபத்தைத் திரும்பப் பெறுவதற்கு முதலீட்டு பங்குத் தளமான "JTFSE"இல் இணையதளத்தின் மூலம் பதிவு செய்தார்.

"அந்நபர் ஜனவரி 25 முதல் கடந்த சனிக்கிழமை வரை சேமிப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கடன் வாங்கி நான்கு வெவ்வேறு வங்கி கணக்குகளில் 15 பரிவர்த்தனைகளுடன் RM521,000 பணத்தை அனுப்பியுள்ளார்.

"பின், RM 1,767,258 லாபத்தைத் திரும்பப் பெறததால் தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்," என்று யஹாயா ஓத்மான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் நேற்று பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் புகார் அளித்ததாகவும், மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்க பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இல்லாத முதலீட்டு சிண்டிக்கேட்டுகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதிக லாபத்தை உறுதியளிக்கும் முதலீடுகளால் ஏமாற வேண்டாம் என்றும் யஹாயா பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

– பெர்னாமா